தேசிய ஜனநாயக கூட்டணி திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் வேட்புமனு தாக்கல்!
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ராஜசேகரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் புவனேஸ்வரி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராமமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அமைச்சர் நேரு கடந்த 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ராஜசேகரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் சாலை தவவளனிடம், வேட்பாளர் ராஜசேகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.