அன்பில் மகேஷை ஆதரித்து அமைச்சர் நேரு பிரச்சாரம்!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுகிறார். இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து, அமைச்சர் கே.என்.நேரு இன்று பொன்மலை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். பொன்மலை பகுதிக்குட்பட்ட பொன்மலைப்பட்டி ரைஸ் மில், கொட்டப்பட்டு, மொரைஸ் சிட்டி விஸ்தரிப்பு, (Morais City), வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர் நகர், பொன்மலைப்பட்டி, உடையார் தெரு, மற்றும் மலையடிவாரம் ஆகிய பகுதிகளில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அமைச்சர் நேரு பேசுகையில்... ஒரு காலத்தில் கொட்டப்பட்டு பகுதி கலைஞருக்கு ஆதரவாக இருந்ததை நான் அறிவேன். இப்பகுதியில் நடந்த மாநாட்டிற்கு பிறகு கலைஞர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். அதன் பிறகு கொட்டப்பட்டு மக்களுக்கு எது கேட்டாலும் செய்து தர வேண்டும் என கலைஞர் கூறியிருந்தார். அன்றிலிருந்து இப்பகுதி மக்களுக்கு எதை கேட்டாலும் செய்து தரும் ஆட்சியாக நமது ஆட்சியில் உள்ளது. அன்பில் மகேஷ் இரண்டு முறை வெற்றி பெற்று மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த தேர்தல்களில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இப்போது துணை முதலமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நெருக்கமாக உள்ளார். எம்ஜிஆரும், கலைஞரும் முதல் திட்டங்களை இங்கிருந்து தொடங்கினர். தளபதி நமக்கு நாமே திட்டத்தை திருவெறும்பூரில் இருந்து தொடங்கினார். நமது துணை முதலமைச்சரும் தமிழ்நாட்டிலே முதல் முறையாக விளையாட்டு மைதானத்தை திருவெறும்பூரில் அமைத்துள்ளார். ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். தண்ணீர் விநியோகம் சீராக கிடைக்க ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் அமைய நடவடிக்கை எடுத்துள்ளார். எதிரணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அன்பில் மகேஷ் அளவிற்கு செயல்பட முடியாது, நம்பிக்கையை பெற முடியாது. அந்த நம்பிக்கையை பெற்றுள்ள அன்பில் மகேஷ் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெறுவார். அதற்கான பெரும் ஆதரவை மக்கள் வழங்க வேண்டும். திருச்சியின் வளர்ச்சிக்கு என்னோடு இணைந்து உற்ற துணையாக இருப்பவர் அன்பில் மகேஷ். 9 தொகுதியிலும் வெற்றி பெற்றதனால் தான் திருச்சி மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்களை முதல்வர் கொடுத்தார். இந்த முறையும் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது திமுக கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.