ஜனநாயகன் படம் வெளியான விவகாரத்தில் திமுக, பாஜக கூட்டு சதி உள்ளது - ஆதவ் அர்ஜுனா பேட்டி!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இந்நிலையில் திருச்சி - தஞ்சை மார்க்கெட் சாலையில் அமைந்துள்ள கிழக்கு தொகுதி அலுவலகத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:--
திருச்சி முழுவதும் சிறப்பான தேர்தல் பிரச்சாரத்தை மக்களே உருவாக்கி வருகிறார்கள். விஜயின் அரசியல் குடும்ப அலையாக மாறி உள்ளது. விஜய் ஜெயிக்க வேண்டும், தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வர வேண்டும், ஒரு மாற்றம் வரவேண்டும், இரண்டு கட்சிகளும் ஊழல்களை மட்டுமே உருவாக்கி உள்ளதாக மக்கள் நினைக்கின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, காரைக்குடி, கன்னியாகுமரியில் லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடி, மாற்றம் வேண்டும் என பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பின்னோக்கிய மாவட்டமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் விஜயின் பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் தேதி அறிவிக்கப்படும். சமூக வலைத்தளங்களிலும் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். விஜய் பிரச்சாரத்தின் போது அதிக அளவிலான தொண்டர்கள் வருவதால் காவல்துறை சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் காரணமாக மாவட்ட அளவிலான பயணத்தை விஜய் மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தெருக்களிலும் அவர் பிரச்சாரம் செய்வதற்கு சாத்தியமில்லாத சூழ்நிலை உள்ளது. விஜய் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இணையான சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உருவாக்கப்படும். அதில் நிச்சயம் அவர் தொகுதி மக்களை சந்திப்பார். கூடிய விரைவில் தமிழகத்திற்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதில் கிழக்கு தொகுதி மக்களின் கோரிக்கைகளும் அறிவிக்கப்படும். எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை, அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசி விலைக்கு வாங்கியுள்ளார். இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். பொதுமக்கள் 1977 க்கு பிறகு மிகப்பெரிய மாற்றத்தை விரும்புகிறார்கள். இதை மே நான்காம் தேதிக்கு பிறகு புரிந்து கொள்வீர்கள். ஜனநாயகன் படம் வெளியான விவகாரத்தில் திமுக, பாஜக கூட்டு சதி உள்ளது. 1973-74 காலகட்டத்தில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பெட்டிகளை ரவுடிகளை வைத்து திருடி, அந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் கலைஞர் தடுத்தார். அதே பாணியில் ரெட் ஜெயின்ட் நிறுவனத்தை வைத்துக்கொண்டு சினிமா துறையை கண்ட்ரோல் செய்து வருகின்றனர். 200 எம்எல்ஏக்களை வைத்து கலைஞர் கட்சி நடத்திக் கொண்டிருந்தபோது, எம்ஜிஆர் தனியாக கட்சி ஆரம்பித்தார். அவருக்கு மக்கள் ஆதரவளித்தனர். அதற்கு காரணம் எம்ஜிஆரிடம் உண்மை இருந்தது. பராசக்தி படத்தை ரிலீஸ் செய்வதற்காக பாஜக ஒத்துழைப்போடு ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்யவில்லை. திமுக, அதிமுக உள்ளிட்ட 35 கட்சி கூட்டணியை, தமிழக வெற்றி கழகம் தனியாக எதிர்த்து வருகிறது. நாங்கள் எந்த காலத்திலும் பாஜகவுடன் இணைய மாட்டோம் என விஜய் தெரிவித்துள்ளார். வட இந்திய அரசியல் தமிழகத்தில் ஈடுபடாது என தெரிவித்தார்.