"விவசாயத்தை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்" - தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு ஜோஸ் சார்லஸ் மார்டின் பதிலடி!

MsdMsd
Apr 16, 2026 - 18:33
"விவசாயத்தை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்" - தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு ஜோஸ் சார்லஸ் மார்டின் பதிலடி!

லட்சிய ஜனநாயக கட்சித் தலைவரும், லால்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்டின், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்:--

லால்குடி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், எனது தாயார் லீமா ரோஸ் மார்டினைப் பார்த்து 'விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்?' என விமர்சித்து வருகிறார். நாங்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பூர்வீக விவசாயக் குடும்பம். இன்றும் விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகிறோம். எங்களுக்கு விவசாயத்தைப் பற்றி யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வளர்த்த அதிமுகவிற்கு துரோகம் இழைத்துவிட்டு, பதவி ஆசைக்காக விஜய் தொடங்கியுள்ள தவெக-வில் கு.ப.கிருஷ்ணன் இணைந்துள்ளார். லாட்டரித் தொழில் குறித்துப் பேச கு.ப.கிருஷ்ணனுக்குத் தகுதியில்லை. ஆதவ் அர்ஜுனா இல்லையென்றால் தவெக-வே இல்லை என்கிற நிலைதான் உள்ளது. கூட்டத்தைக் கூட்டக் கூட அவரிடம் தான் கையேந்த வேண்டியுள்ளது. ​

திமுகவைத் தீய சக்தி என்று கூறும் விஜய், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவில்லை. அங்கு டம்மி வேட்பாளரை நிறுத்திவிட்டு சமரசம் செய்துள்ளார். ​ ​

சொந்தப் பணத்தில் மக்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளோம். இதுவரை சுமார் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். எம்.எல்.ஏ நிதி 15 கோடியுடன், எங்களது சொந்தப் பணம் 50 கோடியைச் சேர்த்து மொத்தம் 65 கோடி ரூபாய் மதிப்பில் லால்குடியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம். மருத்துவமனை, பள்ளிக்கூடம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வோம். பதவிக்காக மட்டும் அல்ல, சேவை செய்வதற்காகவும் அரசியலுக்கு வந்துள்ளோம்.

இரவு பகல் பாராமல் மக்கள் வேட்பாளர் லீமா ரோஸ் மாட்டினுக்கு ஆதரவு தருகிறார்கள். மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. அதனால்தான் அதிகமாக குற்றம் சாட்டு முன் வைக்கிறார்கள். மூன்று முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்த முன்னாள் எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அவரை எதுவும் செய்யவிடாமல் அமைச்சர் நேரு தடுத்து விட்டார்.

லீமா ரோஸ் மார்டின் தனது சொத்து மதிப்பை விதிகளுக்கு உட்பட்டே காட்டியுள்ளார். திமுகவினர் பினாமி பெயரில் சொத்துகளைக் குவித்துள்ளனர்.

குப.கிருஷ்ணன் மீது தேர்தல் விதிமுறையை மீறியதாக மானநஷ்ட வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளோம். தவெகவுக்கு எதிரியாக தற்போது லால்குடியில் அதிமுக மட்டுமே உள்ளது. அதனால்தான் இதுபோன்ற குற்றச்சாட்டை குப.கிருஷ்ணன் முன் வைத்துள்ளார்.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தவெக மிகக்குறைந்த இடங்களையே பெறும். குறிப்பாக ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற வாய்ப்பே இல்லை. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 முதல் 21 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடியின் ஆட்சிக் காலம் ஒரு பொற்காலம். அவரது ஆட்சியில் மாநிலத்துக்கான பணத்தை கேட்டு பெற்று சிங்கப்பூரை போன்று மாற்றுவோம். அதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை. அதேபோன்று லால்குடியையும் மாற்ற முயற்சிப்போம், அரசியலுக்கு சேவை செய்ய வேண்டும் என வருவோர்களை ஊக்குவிக்க வேண்டும். ​

8000 ரூபாய் கூப்பன் விவகாரத்தால் ஒரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது வேதனை அளிக்கிறது. இதற்கு காரணமான மண்ணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முயற்சித்தால் நாடு எப்படி நன்றாக இருக்கும் என கேள்வி எழுப்பினார்.