ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, விவி பேட் உள்ளிட்டவைகள் அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பும் பணி இன்று தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 7,906 வாக்குப்பதிவு கருவி, 3541 கட்டுப்பாட்டு கருவி, 3810 வி.வி.பேட் கையிருப்பில் உள்ளது. இவை அனைத்தும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரங்கள் இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளின் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. முன்னதாக எந்தெந்த தொகுதிகளுக்கு எந்தெந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்ப வேண்டும் என்பதை கணினி முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சரவணன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அந்த பணி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.