மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் - தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு போர்க்கொடி!

MsdMsd
Apr 17, 2026 - 11:39
மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் - தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு போர்க்கொடி!

தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம், திருச்சி உறையூர் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பசுபதி பாண்டியனின் மூத்த சகோதரி பார்வதி சண்முகசாமி தலைமை வகித்தார். இதில் மாநில மாணவர் அணி தலைவர் ஓ.எம்.பாலா, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சரவணன், திருச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அஜித், மாநில ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி மகேஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ​

கூட்டத்திற்குப் பின் மாணவர் அணி மாநில தலைவர் ஓ.எம்.பாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில்:-- ​

மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்களை இழிவாகப் பேசுவதும், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் கண்டிக்கத்தக்கது. முத்தரையர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரிடையே திட்டமிட்டு மோதலை உருவாக்க கதிரவன் முயற்சிக்கிறார். எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பயன்படுத்தி முத்தரையர் சமூகத்தினர் மீது பொய் வழக்கு போட வைக்கும் வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார். ​

திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள் இலவசப் பொருட்கள் வழங்குவதில் காட்டிய பாகுபாட்டினால், சிந்துஜா என்ற இரண்டு பட்டப்படிப்புகள் முடித்த பட்டதாரிப் பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்தப் பெண்ணின் குடும்பத்தை அச்சுறுத்தி, இந்த விவகாரத்தை இரண்டு நாட்களாக மூடி மறைத்துள்ளனர். இது தற்கொலை அல்ல, ஒரு படுகொலை. சிந்துஜாவின் தற்கொலைக்குக் காரணமான திமுக வேட்பாளர் கதிரவன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட திமுக நிர்வாகிகளை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தலைமை நீக்க வேண்டும். ​

தென் மாவட்டங்களில் திமுக எங்களது சமூகத்திற்கு மரியாதை அளிக்கும் நிலையில், திருச்சியில் எங்களை முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றனர். ​முதல்வர் எங்களது சமூகத் தலைவர்களுக்கு மணிமண்டபம் அமைத்துக் கொடுத்ததற்காக நாங்கள் நன்றி உணர்வோடு இருந்தோம். ஆனால், திருச்சி மாவட்ட திமுக அமைச்சர்களோ, வேட்பாளர்களோ எங்களைச் சந்திப்பதற்குக் கூட அனுமதிப்பதில்லை. தேர்தல் விளம்பரங்களில் எங்கள் தலைவர்களின் படங்களைப் பயன்படுத்துவது கூட கிடையாது. ​ ​

மண்ணச்சநல்லூர் தொகுதியில் கதிரவனைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அவரை டெபாசிட் இழக்கச் செய்ய எங்களது சமூக இளைஞர்கள் தீவிரமாகப் பணியாற்றுவார்கள். முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ​எங்களுக்கு எங்கு மரியாதை கிடைக்கிறதோ, எங்களது அரசியல் அங்கீகாரத்தை யார் மதிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்தத் தேர்தலில் எங்களது 22% வாக்கு வங்கி ஆதரவளிக்கும். திருச்சியின் 9 தொகுதிகளிலும் திமுகவின் தோல்விக்குத் தக்க பதிலடி கொடுப்போம் என தெரிவித்தார்.