நல்லாட்சி தரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் - லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேண்டுகோள்!

MsdMsd
Apr 18, 2026 - 22:12
நல்லாட்சி தரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் - லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேண்டுகோள்!

லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்....

புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று சமயபுரம் கோவிலுக்கு வந்துவிட்டு, என்னை பார்ப்பதற்காக லால்குடி பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த தவெக தொண்டர்கள், அவர்களை தவெகவுக்கு ஓட்டுப் போடும்படி வற்புறுத்தியுள்ளனர். தாங்கள் வெளியூர் என்று அந்த இளைஞர்கள் கூறியபோது, வெளியூர்க்காரர்கள் எப்படி இங்கு வரலாம்? எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ​சம்பவ இடத்திற்கு வந்த தவெக வேட்பாளர் கு.பா.கிருஷ்ணன், வண்டியிலிருந்து இறங்கி அந்த இளைஞர்களை தாக்க சொல்லியதை தொடர்ந்து, தவெக தொண்டர்கள் தாக்கியதில் இரண்டு இளைஞர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ​

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ​நாங்கள் கொடுத்த புகாரை ஏற்று இதுவரை எப்.ஐ.ஆர் (FIR) நகல் வழங்கப்படவில்லை. இந்த வழக்கை விசாரித்த எஸ்.ஐ மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோரை, கு.பா.கிருஷ்ணன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி விடுப்பில் செல்ல வைத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கு.பா.கிருஷ்ணன் உறவினர் வீட்டில் ₹.50 லட்சம் சிக்கியது. அதன் விளைவாக இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டு வருகிறார். இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டியவர்கள் அவர்களை வன்முறைப் பாதையில் திசை திருப்புகிறார்கள். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். ​

லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் ₹.25 ஆயிரத்திற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டதாக உண்மை தன்மையற்ற செய்திகளை பரப்பி வருகின்றனர். ​எனது உறவினரான ஆதவ் அர்ஜுனா மீதும் சந்தேகம் உள்ளது. தனது தாயார் லீமா ரோஸ் மார்ட்டினைத் தோற்கடிக்க சதி நடந்து வருகிறது. திமுக மற்றும் தவெக இணைந்து சதி செய்து வருகின்றனர். மேலும், சபரீசன் திருச்சிக்கு வந்து லால்குடியில் திமுகவின் வெற்றிக்காக ரகசியத் திட்டங்கள் தீட்டியுள்ளார்.

​செந்தில் பாலாஜி மற்றும் திமுக அரசு சாராய விற்பனை மூலம் ஆண்டுக்கு சுமார் ₹50,000 கோடி முறைகேடாக சம்பாதித்துள்ளனர். திருச்சியில் உள்ள குறிப்பிட்ட மருத்துவமனையில் உடல் உறுப்பு திருட்டு நடந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அரசுக்கு எதிராகச் செய்திகள் வெளியிடக்கூடாது என ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ​

திமுகவின் "பி-டீம்" ஆக தவெக செயல்பட்டு வருகிறது. ஓட்டுகள் சிதறாமல் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை ஒழிக்க அதிமுக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.