ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி கடையடைப்பு போராட்டம் - திருச்சி மாவட்டத்தில் 1200 மருந்து கடைகள் அடைப்பு!
ஆன்லைன் மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையை காக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்கள், அதிக தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். போலி மருந்து விற்பனையை தடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கலாசார சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும், மின்மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் மருந்து கடைகள் அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் சுமார் 1200 மருந்து கடைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்று கடை அடைப்பில் ஈடுபட்டுள்ளனர். மாநகரின் முக்கிய பகுதிகளான தில்லைநகர், புத்தூர், உறையூர், கே.கே.நகர், கண்டோன்மெண்ட், காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளதால் நோயாளிகள் மருந்துகளை வாங்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.