விஜய் மாடல் ஆட்சியை முடக்க நினைத்தால் தமிழ்நாடு சிக்கலுக்கு ஆளாகும் - எம்பி கிறிஸ்டோபர் திலக் பேட்டி!
திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அதில்:--
புதிய முதல்வர் பதவி ஏற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்கள் தங்கள் துறைகளில் நல்ல துவக்கத்தைத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினர் ஆறு மாத காலம் பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறிவிட்டு, தற்போதே ஆங்காங்கே கதறல்களையும் குமுறல்களையும் வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டதாக விமரிசித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சி இக்கூட்டணியில் இரண்டு அமைச்சர்களுடன் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியிருப்பது கட்சிக்குள் பெரும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியினர் ஆறு மாத காலம் பொறுப்போம் என்று கூறி ஐந்து வாரங்கள் கூட ஆகாத நிலையில் கதற ஆரம்பித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு நூறு பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு புலம்பலும் குமுறலுமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
மக்கள் நலனைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு இப்படிப் பேசுவதால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை என்றும், 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த வலி காரணமாகவே அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்றும் சாடினார்.
திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் ஆக்ரோஷமாக ட்வீட் செய்துவிட்டு பின்னர் அதை நீக்கியுள்ளதைக் குறிப்பிட்ட அவர், இவர்களை யார் தூண்டிவிடுகிறார்கள், இதன் பின்னணியில் என்ன அரசியல் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றார். இதுபோன்ற எதிர்மறையாளர்களைப் புறக்கணித்துவிட்டு, வரக்கூடிய ஆறு மாதங்களில் எவற்றைச் சீர் செய்ய வேண்டும், பழைய அரசின் நல்ல திட்டங்களை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும், ஊழலற்ற ஆட்சியைத் தருவதாகக் கூறியுள்ள முதலமைச்சருக்கு நாம் எவ்வாறு சிறந்த கண்காணிப்பாளர்களாக (Watchdogs) இருக்க வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்துப் பேசுகையில், தமிழ்த் தேசியம் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் இந்துத்துவ சக்திதான் அவர் என்றும், கடந்த 15 வருடங்களாகத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறும் அவர், எந்தவொரு சித்தாந்தத்தையும் மையப்படுத்தாமல் திரள்நிதியை மட்டுமே மைய நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் பெரியார் என்ற பிம்பத்தை உடைப்பதற்காகவே அவர் பேசத் தொடங்கியதால் அவரை இந்துத்துவ சக்தி என்று கூறுவதாகக் குறிப்பிட்ட கிறிஸ்டோபர் திலக், தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் சாதி ஒழிப்பு குறித்தோ, வேங்கைவயல் விவகாரம் குறித்தோ பேசுவதில்லை என்றும், தமிழ் உணர்வை உசுப்பேற்றித் தங்களது அரசியல் தொய்வடையும் போது மட்டுமே தேசியத்தைப் பயன்படுத்துவதாகவும், காங்கிரஸ் போன்ற மிதவாதக் கட்சிகளைத் தாறுமாறாக விமரிசிப்பதாகவும் சாடினார்.
மேலும், அக்கட்சியில் இருந்த காளியம்மாள், ராஜீவ்காந்தி போன்ற பேச்சாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில், மற்ற கட்சிகளைப் பற்றிப் பேச அவருக்கு என்ன தேவை இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
மாநில முன்னேற்றத்திற்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும், பெண் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் அவசியம் என்று குறிப்பிட்ட அவர், கடந்த 10 ஆண்டுகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், இது தற்போதைய முதல்வரால் உருவானது அல்ல என்றும் கூறினார்.
காமராஜர் ஆட்சிக்குப் பிறகு திராவிட மாடல் ஆட்சி அமைந்ததைப் போல, தற்போது விஜய் மாடல் ஸ்டார்ட் பண்ண வேண்டும் என்றும், விஜய் மாடல் ஆட்சியை முடக்க நினைத்தால் தமிழ்நாடு சிக்கலுக்குள்ளாகும் என்றும் தெரிவித்தார்.
தனிமனித விமரிசனங்களைத் தவிர்த்து சமுதாய ரீதியான அரசியல் பேச வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் முதல்வர் கூட்டணி குறித்து விமரிசித்தது பற்றிய கேள்விக்கு, அது தவறானது என்று குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் கட்சியின் சார்பில் தனிப்பட்ட முறையில் தனது கண்டனத்தைப் பதிவு செய்வதாகக் கூறினார்.
தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது குறித்த கேள்விக்கு, ஒட்டுமொத்த அரசியல் அலையில் முன்னாள் முதல்வர் எவ்வாறு தோல்வியடைந்தாரோ, அதேபோலதான் இந்த 23 தொகுதிகளின் தோல்வியும் அமைந்தது என்று விளக்கமளித்தார்.
மகளிருக்கான இலவசப் பேருந்து பயணம் மற்றும் ₹2500 நிதியுதவி போன்ற வாக்குறுதிகள் எப்போது செயல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு, முதல்வர் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை என்றும், அமைச்சரவை தற்போதே அமைக்கப்பட்டுள்ளதால் விரைவில் அவை செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில் கட்சியின் அரசியல் பிரிவு கர்நாடக அரசுடன் பேசி முடிவெடுக்கும் என்றார்.
"எங்கள் தயவில்தான் அரசு நடக்கிறது" என்ற முன்னாள் முதல்வரின் கூற்றுக்குத் பதிலளித்த அவர், 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்று கூறிய அவரே தோற்றுவிட்ட நிலையில், தன் கட்சியின் நிலையைப் பற்றிப் பேசாமல் இவ்வாறு பேசுவது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் நல்லதல்ல என்றார். வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்க வேண்டும் என்றும், கடந்த பத்து வருடங்களாகத் தலைவர்களைத் தூக்கிப் பேசுவதும் வெளிநடப்பு செய்வதுமே வாடிக்கையாக இருந்ததை மாற்றி, புதிய முதலமைச்சரும் புதிய எதிர்க்கட்சித் தலைவரும் புள்ளிவிவரங்களுடன் ஆரோக்கியமான விவாதங்களை முன்வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
சட்டமன்றத்தில் முதல்வர் உரிய முறையில் பதிலளிப்பார் என்றும், போகப்போக உடனுக்குடன் பதிலளிக்கத் தன்னை அவர் தயார்படுத்திக் கொள்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் படத்திற்குப் காவி நிறம் பூசப்பட்டது பெரிய விஷயம் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, அமைச்சர் எந்தக் கண்ணோட்டத்தில் கூறினார் என்று தெரியவில்லை என்றும், ஆனால் கட்சி ரீதியாக இது ஒரு பெரிய பிரச்சினைதான் என்றும் குறிப்பிட்டார்.
அண்ணாமலை புதிய கட்சித் தொடங்கியுள்ளது குறித்து விமரிசித்த கிறிஸ்டோபர் திலக், "மோடியும் அமித்ஷாவும் அவரை வைத்துப் படம் ஓட்டப் பார்த்தார்கள், அது ஓடவில்லை. அதனால் தம்பி நீ தனியாகப் படம் எடு, நாங்கள் பைனான்ஸ் செய்கிறோம் என்று அனுப்பி வைத்துள்ளனர்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
பாஜக என்ற தலைப்பில் அவர் ஏற்கனவே ஒரு படம் எடுத்து முடித்துவிட்டது. தற்போதுதான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்குப் புரிந்திருக்கிறது என்றும், கல்ட் கலாச்சாரத்தை ஒழிப்பேன் என்று பஞ்ச் டயலாக் பேசும் அவரை விடப் பெரிய கல்ட் கலாச்சாரம் வந்தவுடன் அவர் பயந்துவிட்டதாகவும் எம்பி கிறிஸ்டோபர் திலக் தெரிவித்தார். இந்தப் பேட்டியின் போது திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உடனிருந்தனர்.