முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

MsdMsd
Jun 8, 2026 - 20:53
முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவெறும்பூர் வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, 5 ஏக்கருக்குக் கீழ் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறந்துவிட்டு, இந்த ஆண்டுக்கான விவசாயத்தைக் காக்க அரசு முன்வர வேண்டும். அத்துடன், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு உறுதியுடன் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வரும் உரங்களின் விலையால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களின் விலையைக் குறைக்க ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

திருவெறும்பூர் வட்டாரப் பகுதியில் உள்ள உய்யகொண்டான் மற்றும் கட்டளை வாய்க்கால்களை உடனடியாகத் தூர்வாரி, பாசன நீர் தடையின்றி கடைமடை வரை சென்றடைய வழிவகை செய்ய வேண்டும்.

திருவெறும்பூர் வட்டத்தில் கடந்த 2024-25-ஆம் ஆண்டில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இதுவரை பயிர் காப்பீட்டுத் தொகை (இன்சூரன்ஸ்) வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து, உரிய தீர்வுகளை விரைந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.