திருச்சி ரயில்வே கோட்டம் ₹.1390 கோடி வருவாய் ஈட்டி சாதனை - ரயில்வே டிஆர்எம் பேட்டி!
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) பாலக் ராம் நேகி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:--
தெற்கு ரயில்வேயில் உள்ள 6 கோட்டங்களில், திருச்சி கோட்டம் இந்த ஆண்டு அதிகபட்சமாக 8 விருது கேடயங்களை வென்று சாதனை படைத்துள்ளது. ரயில்வே ஊழியர்களின் கடின உழைப்பிற்கு சான்றாக இந்த விருதுகள் கிடைத்துள்ளன. பொது மேலாளரின் கோட்டங்களுக்கு இடையேயான ஒட்டுமொத்த செயல்திறன் கேடயத்தில் இரண்டாம் இடம், மெக்கானிக்கல் துறை செயல்திறன் கேடயம், மருத்துவத் துறை செயல்திறன் கேடயம், பெர்சனல் துறை செயல்திறன் கேடயம், பிளானிங் ஒர்க் ஸ்டடி செயல்திறன் கேடயம், சிறந்த கோட்ட ஸ்டோர்ஸ் கேடயம், சிறந்த பயிற்சி நிறுவனத்திற்கான விருது ஆகியவற்றை திருச்சி கோட்டம் பெற்றுள்ளது. மேலும், கோட்டங்களுக்கு இடையேயான தூய்மை கேடயத்தில் சிறந்த பராமரிப்புக்கான விருதை திருச்சி ரயில் நிலையம் வென்றுள்ளது. இந்த நிதியாண்டில் திருச்சி கோட்டம் சரக்கு போக்குவரத்து மூலம் 777.20 கோடி ரூபாயும், பயணிகள் போக்குவரத்து மூலம் 572.39 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டியுள்ளது. இது தவிர பார்சல் போக்குவரத்து மூலம் 6.92 கோடி ரூபாயும், டிக்கெட் பரிசோதனை மூலம் 13.38 கோடி ரூபாயும், இதர வழிகளில் 20.33 கோடி ரூபாயும் வருவாயாகக் கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 41.072 மில்லியன் பயணிகள் இந்த கோட்டம் வழியாகப் பயணித்துள்ளனர். ரயில்வே பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் காரணமாக பல இடங்களில் ரயில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், எக்ஸ்பிரஸ் ரயில்கள் 94.41 சதவீத சரியான நேரத்திற்கு இயக்கப்பட்டன. இது இந்திய ரயில்வேயின் டாப் 10 கோட்டங்களில் ஒன்றாகும். அடுத்த ஆண்டில் இந்த இலக்கை 96 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சரக்கு கையாளுதலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக 13 மில்லியன் டன் இலக்கை தாண்டி, 13.24 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. குறிப்பாக உணவு தானியங்கள் கையாளுதல் 41 சதவீதமும், உரங்கள் கையாளுதல் 699 சதவீதமும் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. பயணிகள் வசதிக்காக திருநெல்வேலி - நியூ ஜல்பாய்குரி இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், காரைக்கால் - தஞ்சாவூர் பயணிகள் ரயில் மற்றும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பண்டிகை காலங்களில் 56 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. திருச்சியில் ஏற்கனவே உள்ளதை போல, தஞ்சாவூரிலும் ரயில் பெட்டி உணவகம் (Restaurant on Wheels) தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மூன்று புதிய உணவகங்கள் வரவுள்ளன. விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினத்தில் பிராண்டட் ஐஸ்கிரீம் அவுட்லெட்டுகள், ஏசி லாஞ்ச் மற்றும் தங்கும் அறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 21 ரயில் நிலையங்களில் புதிய குடிநீர் குளிர்விப்பான்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆண்டோடு திருச்சி கோட்டத்தில் மொத்தம் 25 லிஃப்ட்கள் மற்றும் 11 எஸ்கலேட்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. திருச்சி ரயில் நிலையத்தின் அனைத்து பிளாட்பாரங்களிலும் எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் வசதிகள் இந்த மாத இறுதிக்குள் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும். பொன்மலை, சோழம்புறம், திருச்சி பாலக்கரை, வாளாடி, உத்தமர்கோவில், கல்லக்குடி, பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய நிலையங்களில் பிளாட்பாரங்களின் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கோட்டத்தில் உள்ள அனைத்து பிளாட்பாரங்களும் உயர் மட்ட பிளாட்பாரங்களாக மாற்றப்படும். நாகப்பட்டினத்தில் புதிய ரயில் நிலைய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. பேரளம் - காரைக்கால் இடையே 23 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை மாற்றப் பணி நிறைவடைந்து, பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி - அகஸ்தியன்பள்ளி இடையே 49 கிலோமீட்டர் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்துள்ளது. அகஸ்தியன்பள்ளி - திருவாரூர் இடையேயான பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் கோட்டத்தின் அனைத்து பாதைகளும் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும். மேலும் திருச்சி - சென்னை சோழன் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி - மங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் பழைய ஐசிஎஃப் கோச்சுகளுக்குப் பதிலாக நவீன சொகுசு எல்.எச்.பி கோச்சுகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் 3,19,728 ரூபாய் மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் மீட்கப்பட்டு 66 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே சட்ட விதிகளின்படி 6,299 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 21,79,550 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத டிக்கெட் புக்கிங் தொடர்பாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 53 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள 470 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கும்பகோணம் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதைக்கான சர்வே பணிகள் நடந்து வருகின்றன. மகாமகம் திருவிழாவிற்கு முன்பாக இரட்டை பாதை அமைவது சாத்தியமில்லை என்றாலும் கும்பகோணம் ரயில் நிலையம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள கூட்ஸ் லைன் பயணிகள் பாதையாக மாற்றப்படுகிறது. லாரி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கும்பகோணத்திற்கு அடுத்துள்ள திருநாகேஸ்வரம் ஹால்ட் ஸ்டேஷன் பிளாக் ஸ்டேஷனாக மாற்றப்பட்டு, கூட்ஸ் ஷெட்டிங் அங்கு மாற்றப்படவுள்ளது. இதன் மூலம் கும்பகோணம் ரயில் நிலையம் முழுக்க முழுக்க பயணிகள் பயன்பாட்டிற்கு மட்டுமே இயக்கப்படும். இந்த ஆண்டு திருச்சி - விழுப்புரம் இடையே ரயில்களின் இயக்க வேகத்தை 130 கி.மீ ஆக உயர்த்துவதே எங்கள் இலக்கு. அதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இதற்காக ப்ரீ-ஃபேப்ரிகேட்டட் ஃபென்சிங் அமைப்பதற்கான கேஸ்டிங் டிப்போக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடலூரில் நடந்த விபத்திற்குப் பிறகு திருச்சி கோட்டம் விபத்தில்லா கோட்டமாக மாற பல பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த கோட்டத்திலுள்ள 139 இன்டர்லாக் செய்யப்படாத கேட்களிலும் ஆட்டோமேட்டிக் பிரைவேட் நம்பர் ஜெனரேஷன் சிஸ்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கேட் மேன் கேட்டை முழுமையாகப் பூட்டாத வரை ஸ்டேஷன் மாஸ்டருக்கு பிரைவேட் நம்பர் ஜெனரேட் ஆகாது, ரயிலையும் இயக்க முடியாது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஸ்ரீ அரவிந்த் சிங் வழிகாட்டுதலில் திருச்சியில் தொடங்கப்பட்ட இந்த தொழில்நுட்பம், தற்போது இந்திய ரயில்வேயின் மற்ற மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த 139 கேட்களில் 104 கேட்களில் தலா இரண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள கேட்களில் இந்த மாத இறுதிக்குள் பொருத்தப்படும். இதன் மூலம் ஸ்டேஷன் மாஸ்டர் தன் அறையில் இருந்தே கேட் மூடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க முடியும். இரவு நேரங்களில் கேட் மேன்கள் விழிப்புடன் இருக்கவும், குடிபோதையில் வருபவர்கள் கேட் மேன்களை மிரட்டுவதைத் தடுக்கவும் இது உதவுகிறது. இந்த 139 கேட்களில், 39 கேட்டுகள் சப்வே அல்லது மாற்றுப்பாதைகள் மூலம் முழுமையாக நீக்கப்படும். மீதமுள்ள 100 கேட்டுகளில், 52 கேட்டுகளை 2027 மார்ச் மாதத்திற்குள் இன்டர்லாக் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள கேட்டுகள் அடுத்த ஆண்டு இன்டர்லாக் செய்யப்படும். ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணிகள், ஏசி கோச்சுகளில் ஏறி நெரிசல் ஏற்படுத்துவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற கேள்விக்கு.... ரயில்வே கட்டுப்பாட்டு அறை அல்லது ரயில் மதத் ஆப் மூலம் புகார் வந்தவுடன், அடுத்த ரயில் நிலையத்திலேயே ஆர்.பி.எஃப் மற்றும் டிடிஇ குழுவினர் மூலமாக அந்தப் பயணிகள் உடனடியாக இறக்கிவிடப்படுகிறார்கள் என்றும், அனைத்து முக்கிய நிலையங்களிலும் ஆர்.பி.எஃப் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பதிலளித்தார். எஸ்கலேட்டர்கள் அடிக்கடி பழுதடைவது அல்லது இயங்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு... பயணிகள் பலருக்கு எஸ்கலேட்டரை எவ்வாறு கையாள்வது என்று தெரிவதில்லை. அதில் உள்ள எமர்ஜென்சி ஸ்டாப் பட்டனை தவறுதலாக அழுத்திவிடுவதால் அது நின்றுவிடுகிறது. பின்னர் எங்கள் தொழில்நுட்ப ஊழியர்கள் வந்துதான் அதை மீண்டும் இயக்க வேண்டியுள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் புதிய எஸ்கலேட்டர்கள் அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து எஸ்கலேட்டர்களும் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் என்பதால் இனி இந்த குறைபாடுகள் இருக்காது என்றார்.