திருச்சியில் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் கைது!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் தேவி. இவருக்கான 2020-ம் ஆண்டு முதல் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகை ரூ. 6 லட்சத்தை வழங்கக்கோரி, திருச்சி மாவட்டக் கல்வி (இடைநிலை) அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலுவைத் தொகையை வழங்குவதற்கு, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) புகழேந்தி, ஆசிரியையிடம் ரூ. 30,000 லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ஆசிரியை தேவி, இது குறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை, ஆசிரியை தேவியின் கணவர் இளமுருகு, கல்வி அலுவலர் புகழேந்தியிடம் நேற்று இரவு வழங்கினார். பணத்தைப் பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள், கல்வி அலுவலர் புகழேந்தியை கையும் களவுமாக பிடித்தனர்.
தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் புகழேந்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு அலுவலகத்தில் கல்வி அதிகாரி லஞ்சம் வாங்கிய நிலையில் பிடிபட்ட சம்பவம் திருச்சி கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.