திருச்சி கந்துவட்டி வாங்கி கொடுத்ததற்கு கமிஷன் கேட்டு ஜவுளிக்கடை உரிமையாளர் மீது தாக்குதல் - கோட்டை போலீசார் விசாரணை!
திருச்சி பெரிய கடைவீதி பகுதியில் பிரபல ஜவுளி நிறுவனம் நடத்தி வருபவர் ஶ்ரீனிவாசன். கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் முடங்கிய போது, தனது ஜவுளி நிறுவனத் தேவைக்காக ஶ்ரீனிவாசன் வங்கிக் கடன் பெற முயற்சித்துள்ளார். அப்போது, தன்னை வங்கி ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்ட கார்த்தி என்பவர், வங்கிகளில் தனக்கு செல்வாக்கு இருப்பதாகக் கூறி ஶ்ரீனிவாசனிடம் நெருக்கமானார்.
வங்கிக் கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், கார்த்தியின் பேச்சை நம்பிய ஶ்ரீனிவாசன், அவர் பரிந்துரைத்த நபர்களிடம் கடன் பெற சம்மதித்தார். ஆரம்பத்தில் 100-க்கு 1 ரூபாய் வட்டி என்று கூறிய கும்பல், பின்னர் 7 மற்றும் 8 ரூபாய் என வட்டியை உயர்த்தி மிரட்டியுள்ளது. 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்த நிலையில், அதைத் திருப்பிச் செலுத்திய பிறகும், வட்டி என்ற பெயரில் மொத்தம் ஒரு கோடி ரூபாய் வரை கேட்டு அந்தக் கும்பல் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஶ்ரீனிவாசன் தனது வழக்கறிஞர் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாகவும், மீதித் தொகையை நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்போவதாகவும் சட்ட ரீதியான அறிவிப்பு அனுப்பியுள்ளார். அரசியல் பிரமுகர்களின் தலையீட்டிற்குப் பிறகு, ஶ்ரீனிவாசன் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை கொடுத்துவிட்டு, தனது சொத்துப் பத்திரங்களைத் திரும்பப் பெற்றார்.
பத்திரம் திரும்பக் கிடைத்த பின்னரும் விடாத கார்த்தி, கடன் பெற்றுத் தந்ததற்கும், அடைத்ததற்கும் கமிஷன் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளார். கடந்த வாரம் ஶ்ரீனிவாசனின் வீட்டிற்கே ஆட்களை அழைத்து வந்து தகராறு செய்துள்ளார். ஶ்ரீனிவாசன் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக எச்சரித்ததால், தற்காலிகமாக அந்த கும்பல் அமைதியாக இருந்தது.
இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி மாலை சுமார் 4:40 மணியளவில் வடக்கு ஆண்டாள் வீதியில் வியாபாரம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஶ்ரீனிவாசனை வழிமறித்த கார்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள், அவரைத் தாக்கியுள்ளனர். மேலும், கந்துவட்டி புகார் கொடுக்கப் போகிறாயா? உன்னை காணாமல் ஆக்கிவிடுவேன், என்று கொலை மிரட்டல் விடுத்து, அவர் வந்த இருசக்கர வாகனத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.
உடனடியாக ஶ்ரீனிவாசன் அருகிலுள்ள கோட்டை காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.