திருச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு; E-KYC பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை மின்னணு முறையில் சரிபார்க்கும் இ-கேஒய்சி (e-KYC) பணிகளை உடனடியாக முடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள், விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:--
அரசு உத்தரவுப்படி, குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களின் இ-கேஒய்சி பதிவை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். திருச்சி மாவட்டத்தில் இதுவரை 91.3 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 2,25,149 பேர் இன்னும் இந்த பதிவை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உடனடியாக தங்களுக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று, இ-கேஒய்சி பதிவை இந்த மாத இறுதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்கள், முதலில் தங்களின் ஆதார் அட்டையில் கைரேகை மற்றும் கண் கருவிழிப் பதிவுகளைப் புதுப்பிக்க வேண்டும். அதன் பின்னரே நியாயவிலைக் கடைகளில் இ-கேஒய்சி பதிவை மேற்கொள்ள முடியும். ஆதார் அட்டையில் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டியவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் இ-சேவை மையங்களை அணுகலாம். அங்கு விவரங்களைப் புதுப்பித்த பிறகு, குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைக்குச் சென்று தங்களின் இ-கேஒய்சி பதிவை நிறைவு செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த அரசுத் திட்டத்தைப் பயன்படுத்தி, காலக்கெடுவுக்குள் இ-கேஒய்சி பணிகளை முடித்து ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.