போதை இல்லா தமிழகம்: திருச்சியில் "வீ த லீடர்ஸ்" அமைப்பின் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு!
போதை இல்லா தமிழகம்: திருச்சியில் "வீ த லீடர்ஸ்" அமைப்பின் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு!
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற மையக்கருத்தை முன்வைத்து, "வீ த லீடர்ஸ்" அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை முதல் அமெரிக்கன் மருத்துவமனை வரை போதை கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும், கடைசி நேரத்தில் காவல்துறையினர் இதற்கு அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து, சட்டம் - ஒழுங்கைப் பேணும் வகையில் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, பேரணி ரத்து செய்யப்பட்டது. அதற்கு மாற்றாக, திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் "வீ த லீடர்ஸ்" இயக்கத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் திரண்டு போதை கலாச்சாரத்திற்கு எதிராகப் போராடவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
போதை கலாச்சாரம் சமுதாயத்தை முழுமையாகச் சீரழித்து வருவதாகவும், இதன் காரணமாகவே 7 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டது. ஒருபுறம் டாஸ்மாக் மதுபானங்கள் இருப்பினும், மறுபுறம் போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகளின் புழக்கம் அதிகரித்து இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. திருச்சியில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், போதை கலாச்சாரத்திற்கு எதிரான தங்களது செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வுப் பணிகள் தொடர்ந்து வீரியத்துடன் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சோழ தேசத்தின் தலைநகரமாகவும், டெல்டா மாவட்டங்களின் மையமாகவும் விளங்கும் திருச்சியில் இருந்து இந்த மாபெரும் இயக்கம் தொடங்கும் என்றும், விரைவில் திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தின் மூலம் "வீ த லீடர்ஸ்" அமைப்பின் நோக்கம் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும் என்றும் அமைப்பினர் உறுதிபடத் தெரிவித்தனர்.