இளம் பெண்ணின் மூளை கட்டியை அகற்றி கியூரிஸ் வேலன் மருத்துவமனை சாதனை!
திருச்சி சுப்பிரமணியபுரம் அருகே ஜெயில் கார்னர் பகுதியில் செயல்பட்டு வரும் கியூரிஸ் வேலன் மருத்துவமனையில், 33 வயதுடைய இளம் பெண் ஒருவரின் மூளையில் இருந்த பெரிய கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
இந்த அறுவைச் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மூளை மற்றும் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹரிஹரசுதன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:-
சில நாட்களுக்கு முன்பு, முகத்தின் ஒரு பகுதியில் தொடர்ந்து தசைத் துடிப்பு ஏற்பட்டதுடன், காது கேட்கும் திறனும் படிப்படியாகக் குறைந்து வருவதாகக் கூறி 33 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவருக்குப் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, சிறுமூளையை அதிகமாக அழுத்தும் வகையில் டென்னிஸ் பந்து அளவுக்கு ஒரு கட்டி வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது. அந்தக் கட்டி, காது மற்றும் முகம் உள்ளிட்ட உறுப்புகளுடன் தொடர்புடைய நரம்புகளை அழுத்தியதால், உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதுகுறித்து நோயாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, அறுவைச் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த அறுவைச் சிகிச்சையின்போது, மூளையைத் திறந்து கட்டி மிகவும் கவனமாக அகற்றப்பட்டது.
சவாலான இந்த அறுவைச் சிகிச்சையில், 90 சதவீதம் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் டாக்டர் ஹரிஹரசுதன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மயக்கவியல் நிபுணர் டாக்டர் கோட்டா ராம்கோபால், இந்த அறுவைச் சிகிச்சை மிகவும் சிக்கலானது என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகளில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றியுள்ளேன். ஆனால், நோயாளியைத் தலைகுப்புறப் படுக்க வைத்து மூளையின் உள்பகுதியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வது மிகவும் சவாலான ஒன்றாகும். நோயாளியின் உடல்நிலையைப் பாதுகாத்தபடி, சரியான அளவில் மயக்க மருந்து அளித்து, பின்னர் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டிய செயலாகும் என்றார்.
கியூரிஸ் வேலன் மருத்துவமனையின் மண்டலத் தலைமை அதிகாரி அஸ்வதி பேசுகையில், திருவானைக்காவல் மற்றும் தில்லைநகர் பகுதிகளில் ஏற்கெனவே கியூரிஸ் மருத்துவமனையின் கிளைகள் செயல்பட்டு வருவதாகவும், ஜெயில் கார்னர் பகுதியில் உள்ள கியூரிஸ் வேலன் மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் கூடிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக இயங்கி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினரின் ஒருங்கிணைந்த செயல்பாடே இதுபோன்ற சவாலான அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள உதவுகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் தேம்பவாணி மற்றும் மயக்கவியல் நிபுணர் டாக்டர் கார்த்திகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.