லால்குடி தொகுதியில் தேர்தல் வரலாற்றை மாற்றும் லீமா ரோஸ் - அதிமுகவின் மாஸ்டர் பிளான்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026க்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வேட்பு மனு தாக்கல் பணிகளை தொடங்கியுள்ளன. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில், 8 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. ஒரு தொகுதியை கூட்டணி கட்சியான அமமுகவிற்கு வழங்கி உள்ளது. இந்த சூழலில் லால்குடி தொகுதியில் 'லாட்டரி அதிபர்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி லீமா ரோஸை களம் இறக்க அதிமுக திட்டம் தீட்டியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையில் பிறந்த லீமா ரோஸ், வணிக நிர்வாகவியலில் (BBA) பட்டம் பெற்றவர். மார்ட்டின் குழுமத்தின் இயக்குநராகவும், மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் தாளாளராகவும் செயல்பட்டு வரும் இவர், சிறந்த நிர்வாகத் திறமைக்காகப் பல கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
அரசியல் ரீதியாக, நீண்ட காலம் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியில் (IJK) பணியாற்றியவர், கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்து தற்போது மகளிர் அணி இணைச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். லீமா ரோஸ் மார்ட்டின், 'மார்ட்டின் அறக்கட்டளையின்' (Martin Charitable Trust) நிர்வாக அறங்காவலராகப் பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இவை அவருக்கு லால்குடி போன்ற தொகுதிகளில் மக்கள் செல்வாக்கை ஈட்ட உதவும் எனக் கருதப்படுகிறது.
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தப் பெரும் நிதி வழங்கி வருகிறார். வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ₹.68 லட்சமும், கோவையில் வகுப்பறைகள் மற்றும் நூலகங்கள் கட்ட ₹.1.60 கோடியும் வழங்கியுள்ளார். இதுவரை ₹.2.5 கோடிக்கும் அதிகமான கல்வி உதவித்தொகைகளை வழங்கியுள்ளார். ப்ராஜெக்ட் திரேலக்ஷா' (Project Threlaksha) மூலம் 600-க்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள் மற்றும் இலவசப் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
கொரோனா காலத்தில் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு ₹3 கோடி வழங்கியதோடு, அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார். மேலும், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ₹.2.70 கோடி நிதி ஒதுக்கிச் செயல்படுத்தி வருகிறார்.
2006 முதல் திமுகவின் கோட்டையாக விளங்கும் லால்குடியை மீட்க அதிமுக லீமா ரோஸை முன்நிறுத்த சில வலுவான காரணங்கள் உள்ளன. லால்குடியில் 40% வரை உள்ள உடையார் சமூக வாக்குகள் மற்றும் குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ வாக்குகளைக் கவர இவர் சரியான வேட்பாளர் என அதிமுக தலைமை கருதுகிறது. ஏற்கனவே அன்பில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு இருசக்கர வாகனங்களை பரிசாக வழங்கியது, கிராமம் தோறும் பரிசுப் பொருட்களை விநியோகித்தது எனத் தனது தேர்தல் பணிகளை அவர் இப்போதே தொடங்கிவிட்டார். மார்ட்டின் குழுமத்தின் வலுவான நிதிப்பின்னணி, தேர்தல் செலவுகளைச் சமாளிப்பதில் அதிமுகவுக்குப் பெரும் பலமாக இருக்கும்.
மேலும் லால்குடி தொகுதியில் கடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சௌந்தர பாண்டியனுக்கும், அமைச்சர் கே.என்.நேருவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள், லீமா ரோஸுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நேருவின் ஆதரவாளர்களே சௌந்தர பாண்டியன் மீது அதிருப்தியில் இருப்பதால் லீமாரோசின் வெற்றி வாய்ப்பு எளிதாகி விட்டதாகவே தோன்றுகிறது.