CPS திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, தமிழக அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கல்லூரி ஆசிரியர் பங்களிப்புத் திட்ட ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் கோரிக்கை!
தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நலச்சங்கத்தின் செயலாளர் ரவி, திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
ஏப்ரல் 1, 2003 ஆம் ஆண்டுக்கு முன்பு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளது. ஜனவரி 1, 2026 முதல் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும், டாப்ஸ் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால், ஏப்ரல் 1, 2003 ஆம் ஆண்டு முதல், டிசம்பர் 31, 2025 ஆம் ஆண்டு வரை, CPS திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 56 ஆயிரம் பேருக்கு மாத ஊதியம் வழங்கப்படுவதில்லை. எனவே இந்த காலகட்டத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்களுக்கு, தமிழக அரசு ஓய்வூதியம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும். கடந்த ஆட்சியில் திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்தது. ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே தற்போது ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நல சங்கத்தின் தலைவர் ஜோசப் ஜான், துணைத் தலைவர்கள் யூனஸ், சுப்புரத்தினம், இணை செயலாளர்கள் அன்பழகன், அருணா, பொருளாளர் கோபண்ணசாமி, ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.