திருப்பாம்புரம் கோயில் நிர்வாகம் மீது இணையவழி அவதூறு பரப்பிய போலி நிருபர் மீது வழக்குபதிவு – கைது செய்யக்கோரி ஐ.ஜி.யிடம் புகார்!

MsdMsd
Sep 6, 2026 - 12:31
திருப்பாம்புரம் கோயில் நிர்வாகம் மீது இணையவழி அவதூறு பரப்பிய போலி நிருபர் மீது வழக்குபதிவு – கைது செய்யக்கோரி ஐ.ஜி.யிடம் புகார்!

திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் ஊழியர்களை குறிவைத்து இணையவழியில் அவதூறு மற்றும் ஆபாச மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பேரளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரத்தில் உள்ள அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மதன்மோகன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கோயிலுக்குள் நுழைந்த மதன்மோகன், அங்குள்ள சன்னதிகளை வீடியோ எடுக்க முயன்றதாகவும், அவரிடம் பத்திரிகையாளர் அடையாள அட்டை குறித்து கேட்கப்பட்டபோது கோயில் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து கோயில் நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கோயில் நிர்வாகம் மற்றும் அதன் பணியாளர்கள் குறித்து அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயில் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியரை தொடர்புபடுத்தி ஆபாசமான கருத்துகள் அடங்கிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாகவும், இதனால் அந்த பெண் ஊழியருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 27.08.2026 அன்று பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் குற்ற எண் 326/2026-ன் கீழ், பெண்ணின் கண்ணியத்தை இழிவுபடுத்துதல், அவதூறு மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழான பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மதன்மோகன் தலைமறைவாக இருப்பதாகவும், கடந்த 05.09.2026 அன்று கோயில் மேலாளர் கே.வள்ளிகந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகக் கூறி, கோயில் மேலாளர் கே.வள்ளிகந்தன் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.) அலுவலகத்தில் மனு அளித்து, தலைமறைவாக உள்ள நபரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அவதூறு தகவல்களைப் பரப்புவதற்கு பின்னணியில் இருந்ததாக குற்றம்சாட்டப்படும் முன்னாள் ஊழியர்கள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோயில் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.