கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக புகார்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் எம்.சரவணன் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ்!

MsdMsd
Sep 6, 2026 - 20:29
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக புகார்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் எம்.சரவணன் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ்!

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், தொடர்ந்து கட்சியையும், கட்சித் தலைவர்களையும் பொதுவெளியில் விமர்சித்து வருவதாகவும் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ, கே.ஆர். ராமசாமி சார்பில் இன்று அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், கடந்த 04.09.2026 அன்று நடைபெற்ற SSA-2 கூட்டத்தில் மாவட்டத் தலைவர் மற்றும் மண்டல பொறுப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் எம். சரவணன் நடந்துகொண்ட விதமும், அதனைத் தொடர்ந்து பத்திரிகைகளில் அவர் தெரிவித்த விமர்சனங்களும் கட்சிக் கட்டுப்பாட்டிற்கு முரணானவை என கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து கட்சியையும், கட்சித் தலைவர்களையும் பொதுவெளியில் விமர்சித்து வருவது, கட்சியின் அமைப்பு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் கட்சியின் கட்டுப்பாடு மற்றும் கண்ணியத்தை மீறிய ஒழுங்கீனமான செயலாகவும், பொதுவெளியில் கட்சியின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள், நடைபெற்ற செயலுக்கு மன்னிப்புக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு எழுத்துப்பூர்வமாக தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என எம். சரவணனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.