உலக ஓசோன் தினம் - மாற்றம் அமைப்பின் சார்பில் கல்லணையில் பிளாஸ்டிக் பைகளை சேகரித்து, காகிதப் பைகள் வழங்கி விழிப்புணர்வு!

MsdMsd
Sep 16, 2026 - 10:45
Sep 16, 2026 - 10:46
உலக ஓசோன் தினம் - மாற்றம் அமைப்பின் சார்பில் கல்லணையில் பிளாஸ்டிக் பைகளை சேகரித்து, காகிதப் பைகள் வழங்கி விழிப்புணர்வு!

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் ‘மாற்றம்’ அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகம் முழுவதும் செப்டம்பர் 16ஆம் தேதி உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து பூமியில் உள்ள உயிரினங்களை பாதுகாப்பதில் ஓசோன் மண்டலம் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதர்களின் தொழில்நுட்ப வளர்ச்சி, அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாடு, வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை உள்ளிட்ட காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லணையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கல்லணைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பயன்படுத்திய பிளாஸ்டிக் பைகள் சேகரிக்கப்பட்டன. அதற்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மக்கும் காகிதப் பைகள் வழங்கப்பட்டன. மேலும், கல்லணை மற்றும் ஆற்றுப்பகுதியை தூய்மையாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் பாதுகாப்பது அனைவரின் கடமை என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ‘மாற்றம்’ அமைப்பின் நிறுவனத் தலைவர், தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்ற குறும்பட நடிகரும் இயக்குநருமான ஆர்.ஏ. தாமஸ், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சதீஷ் ஜான் சாக்ஸிடு, அமைப்பைச் சேர்ந்த சசி, தாய்நேசம் அறக்கட்டளைத் தலைவர் ஹெப்சி, சத்தியா, ராக்கினி, ரித்திக், அபிஷா, பியூலா, ஜாய்ஸ், க்ளோரி, சந்தோஷ், ரஞ்சனி, பிரிதிவி, மதன், ரஞ்சனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.