பெண் மருத்துவரிடம் மருத்துவமனை அமைத்து தருவதாக கூறி ₹.15 லட்சம் மோசடி; ஶ்ரீரங்கத்தை சேர்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
பாண்டிச்சேரியை சேர்ந்த பெண் மருத்துவர் அசிதா என்பவரிடம் மருத்துவமனை அமைத்து தருவதாக கூறி ரூ.15 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வரும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கார்த்திக் ஆதித்யா என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அசிதாவின் தாயார் இன்று புகார் மனு அளித்தார்.
பாண்டிச்சேரியை சேர்ந்த ரத்தினகுமாரி என்பவரது மகள் மருத்துவர் அசிதா. நீண்டகாலமாக திருமணம் ஆகாமல் இருந்த அசிதாவுக்கு, டேட்டிங் செயலி மூலம் திருச்சி ஶ்ரீரங்கத்தை சேர்ந்த கார்த்திக் ஆதித்யா (46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
கார்த்திக் ஆதித்யா, தன்னை இலங்கை, ஷார்ஜா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பெரிய அளவில் தொழில் செய்து வரும் தொழிலதிபர் என அசிதாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அசிதாவிடம், வெளியில் வேலை செய்ய வேண்டாம் என்றும், பெங்களூரு மாநகரின் முக்கிய பகுதியில் ரூ.2.65 கோடி மதிப்பிலான கிளினிக் ஒன்றை வாங்கித் தருவதாகவும் கார்த்திக் ஆதித்யா கூறியுள்ளார். அதற்காக ரூ.2.50 கோடியை தான் முதலீடு செய்வதாகவும், மீதமுள்ள ரூ.15 லட்சத்திற்கு மட்டும் அசிதா வங்கிக் கடன் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
மேலும், அந்த கிளினிக்கை அசிதாவின் பெயரிலேயே மாற்றித் தருவதாகக் கூறி, வங்கிக் கடன் மற்றும் மின்னணு பணப் பரிவர்த்தனைகள் மூலம் அசிதாவிடமிருந்து பணத்தைப் படிப்படியாக பெற்றுள்ளார் கார்த்திக் ஆதித்யா. பணம் மற்றும் ஆவணங்கள் கைமாறிய பின்னர், அசிதா சந்தேகமடைந்து கேள்வி எழுப்பியபோது, என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இதற்கிடையே, கார்த்திக் ஆதித்யா தரப்பில் ஸ்ரீரங்கம் கிரைம் பிராஞ்ச் காவல் நிலையத்தில், அசிதாவும் அவரது தாயாரும் தனக்கு ரூ.30 லட்சம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், அந்தப் பணத்தைத் தராமல் ஏமாற்றுவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அசிதா தரப்பில் தவறு எதுவும் இல்லை என்பதும், கார்த்திக் ஆதித்யாவின் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் அஷிதா குடும்பத்தினர் மீது தவறு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கார்த்திக் ஆதித்யா அளித்த புகார் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது கார்த்திக் ஆதித்யா தலைமறைவாக இருப்பதாகவும், பல்வேறு தொலைபேசி எண்களில் இருந்து தொடர்பு கொண்டும் அவர் அழைப்பை ஏற்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். தங்களைப் போன்று வேறு எந்தப் பெண்களும் இதுபோன்ற மோசடியில் சிக்கி பாதிக்கப்படக் கூடாது என்றும், கார்த்திக் ஆதித்யா மீது உரிய விசாரணை நடத்தி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்ட மருத்துவர் அசிதாவின் தாயார் ரத்தினகுமாரி, திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நேரில் புகார் மனு அளித்தார்.