திருச்சி இபி ரோடு பெட்ரோல் பங்க் பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை!
திருச்சி இ.பி. ரோட்டில் உள்ள மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிட வளாகத்தில் எச்.பி. (HP) பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று இந்த பெட்ரோல் பங்க்கில் ஹேமா என்ற பெண் ஊழியர் பணியில் இருந்தபோது, ஏராளமான வாடிக்கையாளர்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது, கருவாட்டுப்பேட்டையைச் சேர்ந்த கோபால் என்பவர் வரிசையில் நிற்காமல் மாற்றுப் பாதையில் வந்து, பெண் ஊழியரிடம் உடனடியாக பெட்ரோல் போடுமாறு வற்புறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் ஊழியர், பணம் கொடுங்கள், பெட்ரோல் போடுகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபால், பெண் ஊழியரை தரக்குறைவாகப் பேசி, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், பெட்ரோல் பங்க் உரிமையாளருமான சுப்பு செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
கோபால் என்ற நபர் தொடர்ந்து இதுபோன்று அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார். பணம் தராமல் பெட்ரோல் கேட்பது, ஹெல்மெட்டை திருடிச் செல்வது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், இரவு 10 மணிக்கு மேல் வேலைக்கு வர ஊழியர்கள் யாரும் முன்வருவதில்லை. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை; லேபர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முன்பும் இதுபோன்ற புகார்கள் வந்தபோது அரசியல் பிரமுகர்கள் சிலர் சமரசம் செய்து வைத்தனர். ஆனால், அதன் பிறகும் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். இதுகுறித்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், எங்களால் இந்தத் தொழிலைத் தொடர முடியாது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இந்த பெட்ரோல் பங்க்கை மூடிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். இதுகுறித்து ஏற்கனவே பலமுறை காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நாளை திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்படி புகார் அளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் ஹேமா கூறுகையில்,:-
வரிசையில் வருமாறு நான் பணிவோடு கேட்டபோதும், அவர் என்னை மிகவும் தரக்குறைவாகத் திட்டி, பெட்ரோல் பங்கை அடித்து உடைப்பேன் என்றும், பெண் என்று பார்க்கிறேன் இல்லாவிட்டால் கழுத்தை அறுத்துவிடுவேன் என்றும் மிரட்டினார். இதுபோன்று அவர் பலமுறை எங்களிடம் வம்பில் ஈடுபட்டுள்ளார். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.