தீபாவளி பாதுகாப்பு நடவடிக்கை; திருச்சி மத்திய மண்டலத்தில் 34 பேர் கைது – 32 வழக்குகள் பதிவு!

MsdMsd
Nov 11, 2026 - 12:53
தீபாவளி பாதுகாப்பு நடவடிக்கை; திருச்சி மத்திய மண்டலத்தில் 34 பேர் கைது – 32 வழக்குகள் பதிவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களைத் தடுக்க மத்திய மண்டல காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட இரண்டு நாள் அதிரடி சோதனையில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொலை சதித்திட்டம் ஒன்று முறியடிக்கப்பட்டு, ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும் மத்திய மண்டல காவல்துறை சார்பில் நவம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மத்திய மண்டலத்தின் 9 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் 368 இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, குற்றப் பின்னணி கொண்டவர்கள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைக் குறிவைத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக 698 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், 693 வீடுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த அதிரடி நடவடிக்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் மீது மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் திருச்சியில் 7, புதுக்கோட்டையில் 8, பெரம்பலூரில் 4, திருவாரூரில் 5, அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தலா 2, கரூர் மற்றும் தஞ்சாவூரில் தலா ஒரு வழக்கு என பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகள் தொடர்பாக மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கார், 3 இருசக்கர வாகனங்கள், 4 கத்திகள், 9 அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பிடியாணை வழக்குகளில் தொடர்புடைய 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு சோதனையின்போது கொலை செய்யத் திட்டமிட்டிருந்த ஒரு கும்பலின் சதித்திட்டத்தையும் போலீசார் முறியடித்துள்ளனர். அவர்களிடமிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வாகனத் தணிக்கையின்போது மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.