50க்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளன - வேல்முருகன்!
தமிழக வாழ்வுரிமை கட்சி இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்காது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுடவதற்கான வலிமை உள்ளது. அதற்கான அறிவிப்பை நான் முறையாக அறிவிப்பேன் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை அலுவலகத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களுக்கான அரசியல் வாய்ப்புகள், அங்கீகாரம் குறித்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. இதுவரை திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், தற்போது பல கட்சிகள் தங்களது அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோயம்புத்தூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோன்று புரட்சி பாரதம் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி வருகின்றன. மேலும் பல சமூக மற்றும் அரசியல் அமைப்புகளும் தங்களது முடிவுகளை எடுக்கத் தயாராக உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக போன்றவற்றால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனநிலை பல சிறு கட்சிகள் மற்றும் சமூக தலைவர்களிடையே நிலவுகிறது. இதனால், சமூக நீதி, சமத்துவம் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக்காக புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களும் இந்த அரசியல் மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் 50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக வேல்முருகன் தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தலில் சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் காப்பு, மீனவர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களின் உரிமைகள் ஆகியவற்றை முன்வைத்து அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நான் ஏற்கெனவே பல ஆண்டுகளாக தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பை நடத்தி வருகிறேன். அதில் திமுக, அதிமுக கட்சியைச்சேர்ந்த தலைவர்கள் கூட இருக்கிறார்கள். அதில் எப்படி குறிப்பிட்ட பிரச்னைக்காக எப்படி ஒன்று கூடி செயல்படுவோமே அதுபோல பல்வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படவிருக்கிறோம். அதனால் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என சொல்ல முடியாது எனவும் முக்கியமாக ஓட்டு அரசியிலில் ஈடுபடாத கட்சிகளும் உள்ளன என்றார். மேலும் நாளை பல்வேறு கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளதாகவும், அந்த முடிவுக்கு தமிழக மக்களின் பேராதரவு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.