திருச்சி தூய வளனார் கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா - கலாமின் கரங்கள் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாள் விழாவும், வடசென்னையை சேர்ந்த ஏ.பி.ஜே. கலாமின் கரங்கள் அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் டாக்டர் கே. ஆரோக்கியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அறக்கட்டளையின் நிறுவனர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை (NSS) மாணவர்கள் கலந்துகொண்டு, கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் செல்ஃபி பாயின்டில் கலாமின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, உயரிய சிந்தனைகள் மற்றும் இளைஞர்களுக்கான ஊக்கமளிக்கும் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, 'Proud Silambam' சார்பில் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற பாரம்பரிய வீரக்கலையான சிலம்பாட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களின் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் கே. ஆரோக்கியம் பேசுகையில்:- டாக்டர் அப்துல் கலாம் புகழையும், அவரது உயரிய சிந்தனைகளையும் எதிர்காலத் தலைமுறையினரிடம் தொடர்ந்து கொண்டு சேர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஏ.பி.ஜே. கலாமின் கரங்கள் அறக்கட்டளையின் நிறுவனர்கள் பேசுகையில், வரும் ஆண்டுகளிலும் டாக்டர் அப்துல் கலாம் காட்டிய வழியில் பயணித்து, அவரது புகழைப் பரப்புவதோடு, அவரது சிந்தனைகளையும் கனவுகளையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொடர்ந்து விழாக்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். கல்வி, சமூக சேவை, மாணவர் நலன் மற்றும் இளைஞர் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இவ்விழா, அப்துல் கலாமின் கனவுகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.