திருச்சியில் முதல்வர் நடைபயிற்சி - கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோவை ஆதரித்து வாக்குசேகரிப்பு!

MsdMsd
Apr 1, 2026 - 22:54
திருச்சியில் முதல்வர் நடைபயிற்சி - கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோவை ஆதரித்து வாக்குசேகரிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக விழா மற்றும் பொதுக்கூட்டம் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து நேற்று இரவு திருச்சி வந்தடைந்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரக சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்த முதல்வர், இன்று காலை காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காந்தி மார்க்கெட் பகுதியில் நடந்து சென்ற முதல்வர் அப்பகுதியில் வியாபாரிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். முதல்வரின் இந்த திடீர் வருகையால் பொதுமக்கள் அதிகாலையிலேயே இன்ப அதிர்ச்சி அடைந்து, தங்களது செல்போன்களில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.