ஊழல்வாதி அமைச்சர் நேரு விரைவில் சிறை செல்வார் - பிரச்சாரத்தின் போது அமமுக வேட்பாளர் ராஜசேகரன் பேச்சு!
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பணம் செய்து, பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் இன்று திருச்சி கண்டோன்மென்ட், ஒத்தக்கடை, நீதிமன்றம், நியூ ராஜா காலனி, கணபதி புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் மற்றும்தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பிரச்சாரத்தின் போது வேட்பாளர் ராஜசேகரன் பேசுகையில்,...
திருச்சி மாரிஸ் மேம்பாலம் ஐந்தாண்டு காலம் பணி முடிக்காமல் உள்ளது. அந்தப் பகுதியில் மக்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே 200 ஏக்கர் நிலம் பினாமி பெயரில் அமைச்சர் கே.என்.நேரு வைத்துள்ளார். இதே போல லால்குடி பேருந்து நிலையம் அருகே 500 ஏக்கர் நிலம் அமைச்சர் நேரு வைத்துள்ளார். இதன் மதிப்பு 7000 கோடி இருக்கும். இரண்டு வயது குழந்தை முதல் 60 வயது மூதாட்டி, கல்லூரி மாணவிகள் வரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. அமைச்சர் நேரு 1200 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. விரைவில் அமைச்சர் நேரு சிறைக்கு செல்வார் என்றார்.