திருச்சியில் தவெக நிர்வாகி சுமங்கலி சம்பத் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

MsdMsd
Apr 12, 2026 - 21:38
திருச்சியில் தவெக நிர்வாகி சுமங்கலி சம்பத் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள சூசை பிள்ளை தெரு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி சம்பத் (எ) சுமங்கலி சம்பத் வீடு உள்ளது. இந்த வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் மூக்குத்தி, விசில் ஆகியவை இருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டி தலைமையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சுமங்கலி சம்பத் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதே போல தவெக நிர்வாகி சுமங்கலி சம்பத்தின் நண்பரான, ரெங்க நகர் பகுதியில் உள்ள பனாஜி என்பவரது வீட்டிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டி இருந்ததால், மாற்று சாவி ஏற்பாடு செய்து, அந்த வீட்டை திறந்து சோதனை செய்தனர். இந்த சோதனையில் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. திருச்சி கிழக்குத் தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்டியிடுகின்ற நிலையில், அதே தொகுதியில் தவெக நிர்வாகி வீட்டில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.