திருச்சியில் பாரத் கேஸ் லைட் "ஜிப்" புதிய இலகுரக சிலிண்டர் அறிமுகம்!

MsdMsd
Aug 14, 2026 - 15:30
திருச்சியில் பாரத் கேஸ் லைட் "ஜிப்" புதிய இலகுரக சிலிண்டர் அறிமுகம்!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைமுறைக்கான ஃபைபர் கலவை இலகுரக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் "பாரத் கேஸ் லைட் ஜிப்" பிரீமியம் சேவை அறிமுக விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.

சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள நந்தா கேஸ் ஏஜன்சியில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில், பாரத் கேஸ் வணிக தலைமையாளர் டி.வி.பாண்டியன் மற்றும் தலைமை பொது மேலாளர் அசுதோஷ் குப்தா ஆகியோர் கலந்துகொண்டு புதிய சிலிண்டரை அறிமுகம் செய்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் நந்தா கேஸ் ஏஜன்சி நிறுவனர் நந்தா செந்தில், பாரத் கேஸ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பாரம்பரியமான இரும்பு சிலிண்டர்களுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய காம்போசிட் சிலிண்டர்கள் பல அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இரும்பு சிலிண்டர்களை விட பாதியாக எடை குறைவாக இருப்பதால், பெண்கள் மற்றும் முதியவர்கள் கூட இதனை மிகவும் எளிதாகத் தூக்கிக் கையாள முடியும். சிலிண்டரின் உடல் பகுதி ஓரளவு ஒளி ஊடுருவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், சிலிண்டரில் எங்கு கேஸ் அளவு உள்ளது என்பதை நாம் கண்கூடாகப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

திடீரென கேஸ் தீர்ந்துவிடும் என்ற கவலை இனி தேவையில்லை. ஃபைபர் கிளாஸ் மற்றும் அட்வான்ஸ்டு பாலிமர் கொண்டு 3 அடுக்குகளாகத் தயாரிக்கப்படுவதால், சமையலறை தரையில் துருப்பிடித்த கறைகள் படியாது. விபத்துகள் அல்லது தீ விபத்துகளின் போது கூட வெடிக்காத வகையில் மிக உயர்தர பாதுகாப்புடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

எளிய ஆவணங்கள் மற்றும் முகவரி சான்று வழங்கி, ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடி டீலர்கள் மூலமாகவோ உடனடியாக புதிய இணைப்பைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பிரீமியம் திட்டத்தின் கீழ் சிலிண்டர் முன்பதிவு செய்த 4 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே அதிவேகமாக டெலிவரி செய்யப்படும். இது வேலைக்குச் செல்வோருக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த லைட் சிலிண்டர்கள் சிறிய குடும்பங்கள், பேச்சுலர்கள் மற்றும் பயணங்களுக்கு மிகவும் உகந்தது. 5 கிலோ மற்றும் 10 கிலோ சிலிண்டர்கள் வழக்கமான வீட்டு உபயோகத்திற்கு ஏற்றது. மேலும் ஏற்கனவே பாரத் கேஸ் வாடிக்கையாளராக இருப்பவர்கள் தங்களிடம் உள்ள பழைய இரும்பு சிலிண்டரை கொடுத்துவிட்டு, இந்த புதிய பாரத் கேஸ் லைட் சிலிண்டராக எளிதாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கு கூடுதல் பாதுகாப்பு வைப்புத்தொகையாக ₹.300 மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.