திருச்சியில் ரூபிக் கியூப்ஸில் அசத்திய 4 மாணவர்கள் – உலக சாதனை படைத்து அசத்தல்!

MsdMsd
Aug 24, 2026 - 10:54
Aug 24, 2026 - 11:40
திருச்சியில் ரூபிக் கியூப்ஸில் அசத்திய 4 மாணவர்கள் – உலக சாதனை படைத்து அசத்தல்!

திருச்சியில் ரூபிக் கியூப்ஸில் பல்வேறு சவால்களை மேற்கொண்ட நான்கு மாணவர்கள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளனர். சிறு வயது முதலே ரூபிக் கியூப்ஸில் ஆர்வம் கொண்ட இவர்கள், திருச்சியில் செயல்பட்டு வரும் கிங்ஸ் அகாடமியில் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தனர். தொடர் பயிற்சியின் மூலம் வேகம், துல்லியம் மற்றும் நினைவாற்றலை வளர்த்துக் கொண்ட மாணவர்கள், நேரத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு கடினமான சவால்களில் பங்கேற்று சாதனை நிகழ்த்தினர்.

இதில் மாணவர் எஸ்.பி. லக்ஷித் அபினவ், 26 நிமிடங்களில் 50 செஸ் மேட்களில் 10 எண்ணிக்கையிலான 4×4 ரூபிக் கியூப்களை செய்து சாதனை படைத்தார். குறுகிய நேரத்தில் பல கியூப்களை துல்லியமாகத் தீர்த்து முடித்தது அவரது திறமைக்கு சான்றாக அமைந்தது.

அதேபோல், யோகேந்திர இளவரசன், 40 நிமிடங்களில் 100 ரூபிக் கியூப்களை செய்து அசத்தினார். தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான கியூப்களை வேகமாகவும் துல்லியமாகவும் செய்து முடித்தது பாராட்டைப் பெற்றது.

மேலும், ஏ.ஸ்ரீனவ் அஜயா, தொடர்ந்து 20 நிமிடங்கள் ஸ்கேட்டிங் செய்தபடியே 30 ரூபிக் கியூப்களை தீர்த்து புதிய சாதனையை நிகழ்த்தினார்.

சரண்யா நந்தனா ஜுதுரு, ஸ்கேட்டிங் செய்துகொண்டே 11 நிமிடங்களில் பல்வேறு வகையான 12 ரூபிக் கியூப்களை தீர்த்து தனது திறமையை வெளிப்படுத்தினார். 

ரூபிக் கியூப்ஸ் மற்றும் ஸ்கேட்டிங் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த சவால்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. நான்கு மாணவர்களின் சாதனைகளும் Kids World Records Foundation நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வாசவி வித்யாலயா பள்ளி முதல்வர் பாவை, அவ்னியா பப்ளிக் பள்ளி முதல்வர் சபானா பர்வீன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பாட்ரிக், CII பாலாஜி சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

சிறு வயதிலேயே கடினமான சவால்களை ஏற்று, தொடர் பயிற்சியின் மூலம் உலக சாதனை முயற்சியில் வெற்றி பெற்ற நான்கு மாணவர்களுக்கும் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.