ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை தைரியமாக பகிரங்கமாக கூறுகிறேன்; அமைச்சர் விஸ்வநாதன் திருச்சியில் பேட்டி!
தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் கூறுகையில்:-
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு இடைத்தேர்தல் தொகுதிகளிலும் தவெக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. நான் ஏற்கனவே வெற்றி பெற்ற காஞ்சிபுரம் எம்பி தொகுதியில் மதுராந்தகம் தொகுதி இருப்பதால் அதன் நிலவரங்களை நன்கு அறிந்தவன். மேலும், அப்பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம், விசிக, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் செல்வாக்கு மிக அதிகமாக உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக கூட்டணி அமோக வெற்றி பெறும்.
தமிழக முதலமைச்சருக்கு சட்டமன்றத்தில் கருத்துக்களை தெரிவிப்பதற்கான முழு உரிமையும் அதிகாரமும் உண்டு. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் பல்வேறு நிகழ்வுகளை ஒப்பிட்டு முதலமைச்சர் நீண்ட நேரம் சிறப்பான உரையை ஆற்றியுள்ளார். மேலும் முதலமைச்சரின் பதிலுரைக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக நான் விளக்க உரையாற்றினேன். தமிழகத்தின் 75 ஆண்டுகால ஜனநாயக வரலாற்றில் முதலமைச்சரின் இந்தப் பேச்சு ஒரு முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க உரையாகப் பார்க்கப்படுகிறது.
நாங்கள் பிறப்பால் காங்கிரஸ்காரர்கள். 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்திதான் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அவரவர் சார்ந்த கட்சியின் தலைவர்களை பிரதமர் வேட்பாளராக கட்சியினர் கூறுவதில் எந்த தவறும் இல்லை. கிட்டத்தட்ட 140 ஆண்டுகால பாரம்பரியம்மிக்க இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகக் கட்சியின் அடையாளமாகவும், போராட்ட நாயகனாகவும் திகழும் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை நான் தைரியமாக, பகிரங்கமாக கூறுகிறேன்.
தமிழக முதலமைச்சரும், ராகுல் காந்தியையே பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். ராகுல் காந்தியின் அரசியல் போராட்டம் உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறுக்கப்பட வேண்டியது. அவர் வெற்றி பெற்று பிரதமராக வருவதற்காகத் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாராக உள்ளோம்.
இந்தியா கூட்டணியில் இடதுசாரிகள் இணைவது குறித்த கேள்விக்கு, இடதுசாரிகள் தொடர்ந்து இணைவார்கள், இணைந்து செயல்படுவார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் தவெக, காங்கிரஸ், மற்றும் விசிக கட்சிகள் தங்களது பயணத்தை முன்னெடுத்து வருகிறோம்.
விலைவாசி உயர்வு இடைத்தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், தமிழக முதலமைச்சரின் இமேஜ் தமிழ்நாட்டில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு உச்சத்தில்தான் இருக்கும். விலைவாசி உயர்வு என்பது அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியப் பொறுப்பு. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அழைத்து ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதே அரசின் முதன்மைக் கடமை. அந்தப் பணியில் அரசு எப்போதுமே பின்வாங்காது என தெரிவித்தார்.