அரசு கல்லூரியில் எய்ட்ஸ் மற்றும் முழுமையான நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் (JRC) ஆகியவை இணைந்து நடத்திய "எய்ட்ஸ் மற்றும் முழுமையான நல்வாழ்வு" குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் P. டேவிட் லிவிங்ஸ்டன் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அறிவே பாதுகாப்பு, விழிப்புணர்வே தடுப்பு" என்ற கோட்பாட்டை வலியுறுத்தியதுடன், மாணவர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் வளமான சமுதாயம் உருவாக மாணவர்களின் நேரடி பங்களிப்பு எவ்வளவு அவசியமானது என்பதை விளக்கிக் கூறினார்.
மேலும் இந்நிகழ்வில் மணப்பாறை அரசு எய்ட்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் Dr. P. பிரபாகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று எய்ட்ஸ் நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தினார். குறிப்பாக, எய்ட்ஸ் பரவாத வழிமுறைகள் பற்றியும், பரிசோதனை மேற்கொள்வதற்கு மாணவர்கள் எந்தவிதத் தயக்கமும் காட்டக் கூடாது என்பது குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், "தடுப்பு நம் கையில், பாதுகாப்பு நம் பொறுப்பு" என்ற மையக் கருத்தை வலியுறுத்திப் பேசினார்.
முன்னதாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் கா. ரெங்கராஜ் வரவேற்புரை வழங்கினார். பொருளியல் துறை கௌரவ விரிவுரையாளர் மற்றும் RRC ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெ. நந்தகுமார் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, "எய்ட்ஸ் இல்லா சமுதாயமே நம் அனைவரின் இலக்கு, விழிப்புணர்வே பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான ரத்தம் - பாதுகாப்பான வாழ்க்கை" என்ற விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டு, மாணவர்களிடையே எய்ட்ஸ் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதில் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக கணிதவியல் துறைத் தலைவரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனைவர் சி. சுஜாதா நன்றியுரையாற்றினார்.