திருச்சி வேளாண்மை துணை இயக்குநரை கண்டித்து தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் - குறிப்பாணையை திரும்ப பெற்று, நிறுத்தி வைத்துள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க கோரிக்கை!
திருச்சி மாவட்டத்தில் டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் குறைவான சாதனை எனக் கூறி குறிப்பாணை வழங்கி, ஊழியர்களின் மாத ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ள வேளாண் வணிகத்துறை துணை இயக்குநரைக் கண்டித்து, தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் சார்பில் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டிஜிட்டல் கிராப் சர்வே பணி வருவாய்த்துறையைச் சார்ந்ததாகும். இப்பணிக்குத் தேவையான அடிப்படை ஆவணங்கள் வேளாண்மைத்துறையிடம் முறையாகப் பராமரிக்கப்படாத நிலையில், தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்காமல், களப்பணியில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல் உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு சமமற்ற வகையில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு 2,000 இலக்குகளும், சிலருக்கு 10,000 முதல் 20,000 வரையிலான இலக்குகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காட்டுப்பகுதிகள் மற்றும் அடர்ந்த நிலப்பரப்புகளில் களப்பணி மேற்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும் கணக்கில் கொள்ளப்படவில்லை.
இந்தச் சூழலில், 33 சதவீதத்திற்கும் மேல் பணியை நிறைவு செய்த நிறைமாத கர்ப்பிணியான உதவி வேளாண்மை அலுவலருக்கும் குறிப்பாணை வழங்கி, அவரது ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட குறிப்பாணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் க.மாசிலாமணி முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்டப் பொருளாளர் பிச்சை பிள்ளை ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள், தமிழ்நாடு உழவர் உழைப்பாளர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டத் தலைவர் க.மாசிலாமணி கூறுகையில்:-
களப்பணியின் யதார்த்தப் புரிதல் இல்லாமல், உறுப்பினர்களின் நலனுக்கு விரோதமாக துணை இயக்குநர் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், நியாயமற்ற முறையில் ஊதியப் பிடித்தம் செய்யும் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக எங்களது கோரிக்கைகளை ஏற்று, தடுத்து நிறுத்தப்பட்டுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.