திருச்சியில் 4 எம்எல்ஏக்களுக்கு சீட்டு இல்லை - பழி தீர்த்த அமைச்சர் நேரு!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக தரப்பில் இரண்டு கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 7 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் எஞ்சிய, 2 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. துறையூர் தனி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும், மணப்பாறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் திமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதில் திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், திருச்சி மேற்கு கே.என்.நேரு, ஸ்ரீரங்கம் துரைராஜ், திருவெறும்பூர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, லால்குடி பாரிவள்ளல், மண்ணச்சநல்லூர் கதிரவன், முசிறி கருணை ராஜா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திமுகவின் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள பழனியாண்டி, லால்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள சௌந்தர பாண்டியன், முசிறி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள காடுவெட்டி தியாகராஜன், துறையூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள ஸ்டாலின் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களான பழனியாண்டி, சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார் ஆகியோர், திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதில் பழனியாண்டி சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை தனது இல்ல திருமண விழாவிற்கு அழைத்து 51 லட்சம் ரூபாய் தேர்தல் நிதி வழங்கினார். சௌந்தரபாண்டியன் நேரடியாகவே அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்து வந்தார். அதேபோல் ஸ்டாலின் குமாரும், நேருக்கு எதிரான கருத்துக்களை மறைமுகமாக தெரிவித்து வந்தார்.
இந்த சூழ்நிலையில் ஸ்ரீரங்கம், முசிறி, லால்குடி ஆகிய தொகுதிகளுக்கு புதுமுக வேட்பாளர்களை திமுக அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் துறையூர் தொகுதியை கூட்டணி கட்சிக்கு திமுக ஒதுக்கிள்ளது. திமுக முதன்மைச் செயலாளராக உள்ள அமைச்சர் கே.என்.நேரு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இடம் பெற்றிருந்தார். அதேபோல் வேட்பாளர்கள் தேர்விலும் அவர் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் தன்னை எதிர்த்த சட்டமன்ற உறுப்பினர்களை, அமைச்சர் கே.என்.நேரு பழி தீர்த்து விட்டதாக அமைச்சருக்கு எதிரானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.