ரியல் எஸ்டேட் முதல் போதைப்பொருள் வரை, மாதம் ₹.3,000 கோடி வரை கள்ள வருமானம் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றச்சாட்டு!

MsdMsd
Apr 21, 2026 - 18:18
ரியல் எஸ்டேட் முதல் போதைப்பொருள் வரை, மாதம் ₹.3,000 கோடி வரை கள்ள வருமானம் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றச்சாட்டு!

திருச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்:--

​திமுக அரசுக்கு தேர்தல் பத்திரங்கள் மற்றும் கணக்குகள் வாயிலாக 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நான் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தேன். இதற்குக் கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலினோ அல்லது முதலமைச்சர் ஸ்டாலினோ இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை. இது குறித்த முழு விவரங்களையும் எனது நேர்காணல் வீடியோவில் விரிவாக விளக்கியுள்ளேன். ​

கலைஞர் எங்களுடைய தந்தையின் நெருங்கிய நண்பர். அவருக்காக நாங்கள் ஒரு திரைப்படத்தைக் கூட தயாரித்தோம். ஒருமுறை கலைஞர் என் தந்தையிடம், 'என் மகன் ஸ்டாலினை நீங்கள் கூட இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று நட்பு ரீதியாகக் கேட்டுக்கொண்டார். ​கட்சி நிதி நெருக்கடியில் இருந்த காலத்தில், யாரும் உதவ முன்வராத போது, ஒரு நல்ல நோக்கத்தில் கட்சி நடத்துவதற்காக நாங்கள் வங்கி கணக்கு மூலமாகப் பண உதவி செய்தோம். இதற்கான அனைத்து ஆதாரங்களும், தேதிகளும் இணையதளத்திலேயே (தேர்தல் பத்திர விவரங்கள்) வெளிப்படையாக உள்ளன. ​​

தமிழகத்தில் சுமார் 3,000 முதல் 4,000 மதுக்கடைகள் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக (பார் உட்பட) இயங்கி வருகின்றன. ​மதுபாட்டில்கள் கணக்கில் வராமல் நேரடியாக ஆலைகளிலிருந்து கடைகளுக்குச் செல்கின்றன. ​இதனால் கலால் வரி மற்றும் வாட் (VAT) வரி ஏதும் செலுத்தப்படாமல், கள்ளச்சந்தையில் பெரும் லாபம் ஈட்டப்படுகிறது. ​இதைத் தடுக்க யூபி (UP), கர்நாடகா மாநிலங்களைப் போல 'End-to-End QR Code' முறையைக் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டும் என ஒரு கன்சல்டிங் நிறுவனம் மூலம் அறிக்கை தயார் செய்து, அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் வழங்கினோம். ​ஆனால், 'இப்படிச் செய்தால் கள்ளத்தனமாகப் பணம் சம்பாதிக்க முடியாது' எனக் கூறி அந்தத் திட்டத்தை நிராகரித்துவிட்டனர். அதற்குப் பதிலாக 1,000 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்துவிட்டு இந்த விநியோக உரிமையை எடுத்துக் கொள்ளுமாறு எங்களிடம் கூறினர். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட விருப்பமில்லாமல் நாங்கள் அதை மறுத்துவிட்டோம். ​​

லாட்டரித் தொழிலை நம்பி 10 லட்சம் குடும்பங்கள் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வாழ்வாதாரத்திற்காக அதை மீண்டும் சட்டப்பூர்வமாகத் தொடங்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டோம். ஆனால், அரசு அதை நிராகரித்துவிட்டு, "சட்டவிரோதமாக (பிளாக் மார்க்கெட்) ஓட்டுங்கள்" என அறிவுறுத்தினர். அதற்குத் தாங்கள் உடன்படவில்லை. அதேபோல் மணல், குவாரி தொழிலிலும் சட்டவிரோதப் பணிகளில் இணையுமாறு வற்புறுதினர்.

​எங்கள் தந்தை 2003-2004 காலகட்டத்திலேயே இந்தியாவில் அதிக வருமான வரி (50 கோடி ரூபாய்) செலுத்திய நபர். 'பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் தப்பான வழியில் சென்று வழக்குகளைச் சேர்த்து வைத்துவிடாதே' என்பதுதான் அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பாடம். எனவே, நாங்கள் எப்போதும் சட்டப்பூர்வமாகவே செயல்படுவோம். ​

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் ​தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இன்று பள்ளி மாணவர்களின் பைகளில் கூட போதைப்பொருட்கள் இருக்கும் அவலநிலை உள்ளது. காரைக்காலில் ஒரு பள்ளிக்குச் சென்றபோது, போதையில் இருக்கும் மாணவர்களைக் கண்டிக்க ஆசிரியர்களுக்கே பயமாக உள்ளது.

தமிழகத்தில் ரியல் எஸ்டேட் முதல் போதைப்பொருள் வரை அனைத்தையும் ஒரு கும்பலே கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் மாதம் 3,000 கோடி ரூபாய் வரை கள்ளப்பணமாகச் சம்பாதிக்கிறார்கள் என்றார்.